2007, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய வரலாறு நிகழ்ந்த ஆண்டு தான் அது. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. அந்த உலகக்கோப்பை தோல்விக்கான அழுத்தத்தில் இருந்தே வெளி வர முடியாமல் இந்திய முன்னாள் வீரர்கள் தவித்து கொண்டிருந்தனர்.
அதற்கு பின் உடனடியாக தென்னாப்பிரிக்காவுக்கு டி20 உலகக்கோப்பை விளையாட இந்திய அணி புறப்பட வேண்டிய நிலை உருவாகியது. இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறோம் என்ற பெயரில் டிராவிட், சச்சின், கங்குலி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் விலகிக் கொண்டனர். இதனால் யாரை கேப்டனாக நியமிப்பது என்று புரியாமல் தோனியை கேப்டனாக அறிவித்தது திலீப் வெங்சர்கார் தலைமையிலானத் தேர்வு குழு.
பின்னர் யூசுப் பதான், ரோகித் சர்மா, ஜோகிந்தர் சர்மா என்று சில புதிய வீரர்களுடனும், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், உத்தப்பா, ஆர்பி சிங், ஸ்ரீசாந்த் என்று சில அனுபவ வீரர்களுடனும் தென்னாப்பிரிக்கா சென்றது தோனி தலைமையிலான இந்தியா அணி. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடிக்க, இரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்தேப் போனார்கள் என்று கூறலாம்.
தென்னாப்பிரிக்காவில் இருந்தபடியே யுவராஜ் சிங் தனதுப் பேட்டின் மூலமாக ஒரு புயலையே உருவாக்கினார். ஒரு வழியாக அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியப் போது, இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியாவால் வெற்றிபெற முடியாது என்று பிரபல இதழில் எழுதினார். ஆனால் யுவராஜ் சிங்கின் அதிரடி, ஸ்ரீசாந்த் ஸ்விங், ஆர்பி சிங்கின் யார்க்கர், ஹர்பஜன் சிங்கின் சுழல் என்று இந்திய அணி அடித்த அடி, ரவி சாஸ்திரியின் வீட்டில் எதிரொலித்தது.
இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மாவிடம் கொடுத்து வெற்றியை உறுதி செய்தார் தோனி. கவுதம் கம்பீர், ரோகித் சர்மா, இர்பான் பதான், ஆர்பி சிங் ஆகியோர் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அன்றையப் போட்டியில் வெற்றிபெற்ற பின் தோனி நேரடியாக சென்று, “We Proved You Wrong” என்று பதில் அளித்தார்.
சின்ன பசங்களால் என்ன செய்திட முடியும் என்று இந்திய இரசிகர்கள், முன்னாள் வீரர்கள், எதிரணிகள் என அனைவரும் யோசித்த நிலையில் கோப்பை வென்று கொடுத்தார் தோனி.