திருமலை திருப்பதியில், பக்தர்களுக்கு இலவச சேவை செய்து வந்த இ – பேருந்தை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி திருமலையில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்களின் நலன் கருதி, இலவசமாகப் பயன்படுத்த மின்சார பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது. எனவே, திருமலையைப் பசுமை நகரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தற்போது, டீசலில் இயங்கி வரும் பேருந்துகளை படிப்படியாக நிறுத்தவும், திருமலையைச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மின்சார பேருந்து தொடங்கப்பட்டுள்ளன என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மார்ச் 27 அன்று, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, மின்சார பேருந்துகளைத் தொடங்கி வைத்தனர். இந்த இ -பேருந்தின் விலை சுமார் ரூ. 1.80 கோடி ஆகும்.
இதன் முதல் கட்டமாக 35 இ-பேருந்துகள் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டன. தற்போதைய நிலவரப்படி, ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் திருமலை – திருப்பதி சாலையில் 64 இ-பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்த நிலையில், திருமலையில் இலவச மின்சார பேருந்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினருக்குப் புகார் வந்தது. இதனையடுத்து, அந்த பேருந்து எங்கு உள்ளது என ஜிபிஎஸ் கருவி மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, அந்த பேருந்து, அதிகாலை 3.53 மணிக்கு ஜிஎன்சி சுங்கச்சாவடியை மின்சார பேருந்து கடந்துள்ளதும், நாயுடு பேட்டையில் பேருந்து இருப்பதையும் கண்டறிந்தனர். இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, திருமலை திருப்பதி சுகாதார அதிகாரியின் மின்சார கார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருடப்பட்டது குறிப்பிட்டதக்கது.