விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு, புரட்டாசி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு, வரும் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை, 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால், ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 29-ந் தேதி புரட்டாசி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு, வரும் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்கக் கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேறப் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.