ரஷ்யாவில் பயங்கரவாத எதிர்ப்பு களப்பயிற்சி 2023 -ல் பங்கேற்பதற்காக, இந்திய ராணுவக் குழு ரஷ்யா செல்கிறது.
செப்டம்பர் 25 முதல் 30 வரை ரஷ்யாவில் நடைபெற உள்ள தீவிரவாத எதிர்ப்பு களப் பயிற்சிக்காக ராஜபுதன ரைபிள்ஸுடன் இணைக்கப்பட்ட பட்டாலியனைச் சேர்ந்த 32 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழு ரஷ்யா புறப்பட்டுச் செல்கிறது.
இந்த ஆண்டு ஆசியான் உறுப்பு நாடுகளும், மற்றும் அதன் நட்பு நாடுகளும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றன. இந்தப் பயிற்சியில் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் தீவிரவாதக் குழுக்களை அழிப்பது உள்ளிட்ட எதிர்ப்பு பயிற்சிகள் இடம் பெறுகிறது.
பயங்கரவாத எதிர்ப்புத் துறையில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் ஊக்குவிப்பதும் இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இது, மியான்மருடன் இணைந்து ரஷ்யா நடத்தும் பன்னாட்டுக் கூட்டு ராணுவப் பயிற்சியாகும். இதற்கு முன்னதாக 2023 -ம் ஆண்டு ஆகஸ்ட் 2 -ம் தேதி முதல் 4 -ம் தேதி வரை மியான்மாரின் நே பை டாவில் தீவிரவாத எதிர்ப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளிடையே கருத்து ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில், கடந்த 2017 -ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.