நீலகிரி மாவட்டத்தில் புலிகள் உயிரிழப்பு குறித்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய குழு அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் சின்னக்குன்னூர், எமரால்டு, நடுவட்டம், கார்குடி உள்ளிட்ட வனப்பகுதிகளில், கடந்த ஒரு மாதத்தில் 10 புலிகள் உயிரிழந்தன. இது வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இயற்கையான மரணம், மின்சாரம் தாக்கி உயிரிழத்தல், விஷம் வைத்துக் கொல்லப்படுதல் போன்றவற்றால் புலிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது எனக் காரணத்தை அடுக்காமல், ஒரு புலி கூட பலியாகவில்லை எனக் கம்பீரமாக வனத்துறை மார்தட்டுவது எப்போது எனக் கேள்வி எழுப்பிய விலங்குகள் நல ஆர்வலர்கள், புலிகள் உயிரிழப்பு குறித்து, உயர்மட்டக் குழு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் புலிகள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த டேராடூனில் இருந்து தேசிய புலிகள் ஆணைய குழுவினர் இன்று ஊட்டிக்கு நேரில் வர உள்ளனர். இந்த குழுவில் தேசிய புலிகள் ஆணையத்தின் குற்ற பிரிவு ஐ.ஜி. மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.
இவர்கள் புலிகள் இறந்து கிடந்த, முதுமலை புலிகள் காப்பக சீகூர் வனச்சரகம், நடுவட்டம், கார்குடி, எமரால்டு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர்.
மேலும், முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணை அறிக்கையைத் தேசிய புலிகள் ஆணையத்திற்கு அனுப்புவார்கள். இதனைத்தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.