மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால், நாக் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், நாக்பூரின் முக்கிய நீர்நிலையான அம்பாசாரி ஏரி நிரம்பி முழுமையாக நிரம்பியது. இதன் காரணமாக, குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது.
அப்பகுதியில், மழை வெள்ளத்தால், நான்கு பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.
இதனை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை இணைந்து மழைநீர் சூழ்ந்து உள்ள பகுதிகளில் இருக்கும் மக்களைப் பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.
மாநகராட்சி ஊழியர்கள் குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் தேங்கிய சேறு, சகதிகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, சமுதாய உணவுக்கூடங்களின் வாயிலாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து வருகிறது.
மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க, மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணியும், மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சரி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.