மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் திட்டத்தின் கீழ் 4,505 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27-ம் தேதி குஜராத் மாநிலத்துக்கு வருகை தருவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அப்போது, சோட்டா உதய்பூரில் நடைபெறும் விழாவில் குஜராத் மாநிலத்திலுள்ள 22 மாவட்டங்களுக்கான 5,206 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து குஜராத் மாநில அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “வைப்ரன்ட் குஜராத் உச்சிமாநாட்டின் 20-வது ஆண்டு விழா செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26-ம் தேதி குஜராத் மாநிலத்துக்கு வருகை தருகிறார். இரவு காந்திநகரில் தங்கி ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி, செப்டம்பர் 27-ம் தேதி சயின்ஸ் சிட்டியில் நடக்கும் வைப்ரன்ட் குஜராத் உச்சிமாநாட்டின் 20-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார்.
பின்னர், பொடேலி மற்றும் வதோதராவில் நடைபெறும் 2 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். தொடர்ந்து, சோட்டா உதய்பூரில் நடக்கும் நிகழ்ச்சியில் 5,206 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அப்போது, மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் திட்டத்தின் கீழ், 4,505 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டு அர்ப்பணிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 1,426 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்கள் தொடங்கப்படுகிறது. மேலும், 9,088 புதிய வகுப்பறைகள், 50,300 ஸ்மார்ட் வகுப்பறைகள், 19,600 கணினி ஆய்வகங்கள், 12,622 வகுப்பறைகள் மற்றும் இதர வசதிகளை மேம்படுத்துதல் உட்பட 3,079 கோடி ரூபாய் மதிப்பிலான முடிக்கப்பட்ட திட்டங்கள் திறக்கப்படும்.
இதுதவிர, குஜராத்தில் புதிய நவோதயா வித்யாலயாவை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். தாஹோடில் 23 கோடி ரூபாய் செலவில் புதிய நவோதயா வித்யாலயாவும், 10 கோடி ரூபாயில் எஃப்.எம். ரேடியோ ஸ்டுடியோவும் திறக்கப்படுகின்றன. மேலும், 22 மாவட்டங்களில் உள்ள 7,500 கிராமங்களில் 20 லட்சம் பயனாளிகள் பயன்பெறும் கிராம வைஃபை வசதிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதோடு, சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறையின் கீழ் 277 கோடி ரூபாய், நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் 251 கோடி ரூபாய், குடிநீர் வழங்கல் துறையின் கீழ் 80 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களும் திறந்து வைக்கப்பட்டு அர்ப்பணிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.