மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் இரவு முதலே கனமழை பெய்தது.
இராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான இராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு, காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம், விசாரம், இரத்தினகிரி, கலவை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும், பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்ததால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை, தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை, தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.