தேசியத் தலைநகர் டெல்லியில் பிரகதி மைதானத்தில் அமைந்திருக்கும் பாரத் மண்டபத்தில், இன்று நடைபெறும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
இந்தாண்டு ஜி20 உச்சி மாநாட்டின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஜி20 தலைமைத்துவம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள 75 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக சிறப்பு கருத்தரங்கம் நடத்துவதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்தது.
அதன்படி, வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு (ஆர்.ஐ.எஸ்.) சார்பில், நாடு முழுவதும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி தேசியத் தலைநகர் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “ஜி20 ஜன் பகிதாரி இயக்கத்தில் நாடு முழுவதும் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த 5 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று சாதனை படைத்தார்கள்.
அந்த வகையில், ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முயற்சியின் கீழ் நாடு முழுவதும் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில் பல்கலைக்கழகங்களுக்காகத் தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகளையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சுமார் 3,000 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துகொள்வார்கள். இது தவிர, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் நேரலை வாயிலாகக் கலந்துகொள்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முயற்சியானது, இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
முதலில் இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில், 75 பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால், இறுதியில் இந்தியா முழுவதும் 101 பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.