சென்னை புது வண்ணாரப்பேட்டை பாபு ஜெகஜீவன் ராம் மைதானத்தில் பொது மக்களுக்கு ஓட்டுநர் பயிற்சி நடைபெறும் இடம் இழுத்து மூடப்பட்டுள்ளதால், ஓட்டுநர் உரிமம் பெற வந்த வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னையில், திரும்பிய இடம் எல்லாம், சந்து பொந்துகளில் கூட நின்று கொண்டு, போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்போது, தலைக்கவசம் அணியாதவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். போக்குவரத்து போலீசாருக்கு அபராதம் கட்டும் பணத்தைவிட, லைசென்ஸ் வாக்குவது மிகவும் எளிது என்பதால், ஓட்டுநர் உரிமம் வாங்குவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை புது வண்ணாரப்பேட்டை பாபு ஜெகஜீவன் ராம் மைதானத்தில் தண்டையார்பேட்டை போக்குவரத்து வட்டார அலுவலகம் மூலம் பொது மக்களுக்கு டிரைவிங் பயிற்சி வழங்கி ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நான்கு சக்கர வாகனத்தில் பயிற்சி பெற வந்த ஒருவர் விபத்தில் சிக்கினார். இதனால், இன்று திடீரென அந்த மைதானம் மூடப்பட்டது. மேலும், வாகனப் பயிற்சியும் நிறுத்தப்பட்டது.
இதனால் கார் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டி காண்பிக்க வந்த பொதுமக்கள் புது வண்ணாரப்பேட்டை பாபு ஜெகஜீவன் ராம் மைதானத்தில் காலை முதல் காத்துக்கிடக்கின்றனர்.
மேலும், இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கிருந்து உரிய பதில் வரவில்லையாம். இதனால், பொது மக்கள் கொதிப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் தண்டையார்பேட்டை போக்குவரத்து வட்டார அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடும் மன நிலையில் பொது மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையொட்டி, அப்பகுதியில் பாதுகாப்பு கருதி, காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.