பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கும் மாற்றும்படி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து, இம்ரான் கானை அடியாலா சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். 2018 முதல் 2022-ம் வருடம் வரை பிரதமராக இருந்தார். இவரது ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தது. இதனால், மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
இதைக் காரணமாக வைத்து இம்ரானின் கூட்டணியில் இருந்த முக்கியக் கட்சி ஒன்று, எதிர்கட்சியுடன் இணைந்தது. இதனால் 2022-ம் ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து இவரது அரசு கலைந்தது.
இதன் பிறகு, இம்ரான் கான் மீது ஊழல், முறைகேடு, கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் தோஷகானா எனப்படும் அரசுக்குச் சொந்தமான பொருட்களை விற்று மோசடி செய்த வழக்கும் ஒன்று. இவ்வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, பஞ்சாப் மாகாணத்திலுள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால், அந்த சிறையில் இம்ரான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதோடு அவர் முன்னாள் பிரதமர் என்பதால் அவருக்கு ஏ வசதி கொண்ட வேறு சிறைக்கு மாற்றும்படி அவரது மனைவி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதேபோல, இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்தவர்களும், அவரது உடல்நலம், சமூக மற்றும் அரசியல் அந்தஸ்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஏ வகுப்பு வசதிகள் கொண்ட சிறைக்கு மாற்றும்படி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், இம்ரான் கானை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றும்படி உத்தரவிட்டது.
இதையடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அடியாலா சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன. இதனிடையே, இன்னும் 5 மாதங்களில் (அடுத்தாண்டு பிப்ரவரி மாதம்) பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்குள் இந்த வழக்கிலிருந்து விடுதலையானால் மட்டுமே இம்ரான் கானால் தேர்தலில் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.