தொழில்நுட்ப மாற்றம் நிர்வாகத்தை எவ்வாறு எளிதாக்கியது என்பதை கடந்த 9 ஆண்டுகளாக நீங்கள் கண்டிருக்கிறீர்கள். எனவே, புதிதாக பணியில் சேர்பவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கி இருக்கிறார்.
நாட்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்தாண்டு அக்டோபர் 22-ம் தேதி ரோஜ்கர் மேளா என்கிற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது, புதிய எண்ணம், உள்ளடக்க கண்காணிப்பு, பணி முறை அமலாக்கம் மற்றும் வெகுஜன பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெரிய இலக்குகளை அடையும் வகையில் தனது அரசாங்கம் செயல்படுவதாக பிரதமர் மோடி கூறினார்.
இத்திட்டத்தின் மூலம், தபால் துறை, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை, வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, அமைச்சகம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் அரசு பணியில் சேருவார்கள்.
அந்த வகையில், ரோஜ்கர் மேளா திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காணொளி வாயிலாக 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நாடு, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவாக மாறத் தீர்மானித்திருக்கிறது.
அடுத்த சில ஆண்டுகளில், நாம் 3-வது பெரிய பொருளாதார நாடாக இருக்கப் போகிறோம். இந்தக் காலகட்டத்தில், ஒவ்வொரு அரசு ஊழியரும் மிகப்பெரிய பங்கை வகிக்கப் போகிறார்கள். நீங்கள் எப்போதுமே இந்த நாட்டின் குடிமகன் என்கிற மனப்பான்மையுடன், இந்த நாட்டு மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும்.
கடந்த 9 ஆண்டுகளில், தொழில்நுட்ப மாற்றம் எவ்வாறு நிர்வாகத்தை எளிதாக்கி இருக்கிறது என்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். முன்னதாக, ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யும் கவுன்ட்டர்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இந்த சிக்கலை தொழில்நுட்பம் நீக்கியது. அதேபோல, ஆதார் அட்டைகள், டிஜிட்டல் லாக்கர்கள் ஆகிய ஆவணங்கள் சிக்கலான தன்மையை நீக்கிவிட்டன.
ஆகவே, பணி இடத்தில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள். அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தும் பொறுப்பு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களின் மீதும் உள்ளது. உங்களைப் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும்போது, கொள்கைகளைச் செயல்படுத்தும் வேகமும் அளவும் அதிகரிக்கும்” என்று கூறினார்.