சீன கப்பல் வருகைக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக இன்னும் பேச்சுவார்த்தைதான் நடந்து வருகிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனா 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவை உளவு பார்க்க சீனா திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் “யுவான் வாங் 5” என்கிற உளவுக்கப்பலை சீனா அனுப்பியது. இக்கப்பல், இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தில் ஒரு வாரம் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது, தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருக்கும் இந்திய பாதுகாப்பு சார்ந்த நிறுவனங்களை உளவு பார்த்தது.
இதையடுத்து, இலங்கைக்கு தனது கண்டனத்தை பதிவு செய்த இந்தியா, நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக இலங்கையிடம் தனது கவலையையும் தெரிவித்தது. மேலும், இனி இவ்வாறு நடக்காதவாறு பார்த்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தியது. இந்த சூழலில், “ஷியான் 6” என்கிற மற்றொரு உளவுக்கப்பலை, இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தில் நிலைநிறுத்துவதற்கு சீனா முயற்சித்து வருகிறது. இதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், இக்கப்பல் இந்தாண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி இலங்கைக்கு வரவிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, இலங்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் இந்தியா, தனது கவலையையும் வெளிப்படுத்தி இருந்தது. மேலும், இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இம்மாத தொடக்கத்தில் இலங்கைக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது.
இந்நிலையில்தான், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, “வெளிநாட்டுக் கப்பல்கள், விமானங்கள் இலங்கைக்கு வருவது குறித்து நிலையான இயக்க முறை (எஸ்.ஓ.பி.) ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இதுகுறித்து இந்தியா உள்ளிட்ட நேசநாடுகளுடன் கலந்தாலோசித்தும் இருக்கிறோம். இந்த பேச்சுவார்த்தை சில காலமாகவே நடந்து வருகிறது. ஆகவே, வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் இலங்கையின் நிலையான இயக்க முறையை பின்பற்றுகின்ற வரை பிரச்சினை இல்லை. அதேசமயம், அதனை பின்பற்றாவிட்டால் பிரச்சினைதான்.
மேலும், சீன விவகாரம் தொடர்பாக, இந்தியா நீண்டகாலமாக தனது கவலையை வெளிப்படுத்தி வருகிறது. அக்டோபர் 6-ம் தேதி இலங்கையில் சீன கப்பலை நிலைநிறுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக, இன்னமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எனினும், இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். மேலும், நமது பிராந்தியத்தை எப்போதும் அமைதியாக வைத்திருப்போம் என்று கூறிவருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.