சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி புறப்படும் இரயில், மற்றும் திருப்பதியிலிருந்து சென்னைக்குச் செல்லும் இரயில் ஆகியவை வரும் 28 -ம் தேதி முதல் அக்டோபர் 12 -ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த திருக்கோவில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ளது.
இத்தலத்தின் மூலவர் வெங்கடாசலபதியை, ஏழுமலையான் என்றும் பக்தர்களால் அழைக்கின்றனர் காரணம், சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழ்ந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த திருக்கோவிலுக்கு, இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலத்தில் உள்ள பக்தர்களும், வெளிநாட்டில் உள்ள பக்தர்களும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வழக்கம். தங்களது வேண்டுதல் நிறைவேறிய உடன் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
மேலும், ஏழுமலையானுக்கு புராட்டாசி மாதம் மிகவும் உகந்த மாதம் என்பதால், திருமலையில் ஏராளமான சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதனைக் காணச் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் இரயிலில் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ரேணுகுண்டா இரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரயில் தண்டாவாளம் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் வரும் 28 -ஆம் தேதி முதல் அக்டோபர் 12 -ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையிலான இரயில் போக்குவரத்து இரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி புறப்படும் காலை 6.25 மணிக்குப் புறப்படும் இரயில், மற்றும் மதியம் 2.15 மணிக்குப் புறப்படும் இரயில், மற்றும் மாலை 4.35 மணிக்குப் புறப்படும் இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, திருப்பதியிலிருந்து சென்னைக்குக் காலை 6.25 மணிக்கும், அடுத்து 10.10 மணிக்குப் புறப்படும் இரயில், மாலை 6.05 மணிக்குப் புறப்படும் இரயில் ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளன.