ஞானவாபி மசூதி வழக்கில் இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், வியாஸ் குடும்பத்தினர் வசம் இருக்கும் வளாகத்தின் பாதாள அறையை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கக் கோரி, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலின் அருகிலேயே ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. இந்த மசூதி 17-ம் நூற்றாண்டில் மொகலாய அரசர் ஒளரங்கசீப்பால் இந்துக் கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்று இந்துக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக, இந்து பெண்கள் தாக்கல் செய்ய மனுவின் அடிப்படையில், வாரணாசி நீதிமன்றம் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாடியும் பலனில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி முதல் இந்திய தொல்லியல் துறையினர் ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், இந்துக்கள் தரப்பில் வாரணாசி நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவில், வியாஸ் குடும்பத்தினர் வசம் இருக்கும் தங்கானா எனப்படும் தெற்கு பகுதி பாதாள அறையை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில், “வியாஸ் குடும்பத்தினர் சார்பாக, வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் நாங்கள் ஒரு சிவில் வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறோம். மேலும், மற்ற வழக்குகளைப் போலவே இவ்வழக்கின் அசல் விசாரணையையும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிபதி முன்பு விண்ணப்பித்திருக்கிறோம்.
இம்மனுவிலுள்ள முக்கியக் கோரிக்கை என்னவென்றால், மசூதியின் தெற்குப் பகுதியில் உள்ள பாதாள அறையை அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி கமிட்டி கையகப்படுத்தலாம். எனவே, அந்த அடித்தளத்தை உடனடியாக மாவட்ட நீதிபதி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
இன்று எங்களின் இடமாறுதல் விண்ணப்பத்தின் மீதான விசாரணை நடந்தது. அப்போது, இந்த வழக்கில் அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி ஆஜராகி பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல, இடமாற்ற விண்ணப்பத்தின் மீது நாளை உத்தரவு வரும். இதன் பிறகு, இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
1991-ம் ஆண்டு, வியாஸ் குடும்பத்தினர் ஞானவாபி மசூதி கட்டமைப்பை இந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தனர். மேலும், மசூதியின் மேல் அமைப்பு, நமாஸ் செய்யப்படும் இடம் மற்றும் குவிமாடங்கள் தவிர, முழு அமைப்பும் காசி விஸ்வநாதர் கோவிலில் இருக்கிறது என்று கூறியிருந்தனர். இக்குடும்பத்தினர் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் ஞானவாபி மசூதி வளாகத்தில் வசிக்கவில்லை என்றாலும், மசூதியின் 4 பாதாள அறைகளில் ஒன்று இன்னும் இவர்கள் வசம்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.