கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரை NIA அதிகாரிகள் நேரில் அழைத்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் கடந்த ஆண்டு டவுன்ஹால் பகுதியில் கார் குண்டு வெடிப்பு நடந்தது. இது தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில், 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 13 -வது நபராக அசாருதீன் என்பவர் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கொச்சி சிறையில் இவர் வேறு ஒரு வழக்கு சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு சம்பந்தமாக நீதிமன்ற அனுமதி பெற்று NIA அதிகாரிகள், அவரைக் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், NIA அதிகாரிகள் அசாருதீனை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் 12 -வது நபராகக் கைது செய்யப்பட்ட இத்ரீஸ் என்பவனையும் விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர்.
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டவர்களை நேரடியாக அழைத்து வந்தும், அவர்களது வீடு மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் NIA அதிகாரிகள் விசாரணை மற்றும் சோதனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.