கடலூர் மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான 186 ஏக்கர் தரிசு நிலத்தை, கடலூர் திமுக எம்.பி.ரமேஷ் மற்றும் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் உறவினர்களுக்கு அரசு அதிகாரிகள், சட்ட விரோதமாக தாரை வார்த்தது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிலம்பநாதன் பேட்டை ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான 186 ஏக்கர் தரிசு நிலம் மற்றும் நீர்நிலைகள் திமுக எம்பி ரமேஷ் மற்றும் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் உறவினர்களுக்குப் பட்டா வழங்கியுள்ளதாகப் பிரச்சினை வெடித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, சிலம்பநாதன் பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் தெய்வானை சிங்காரவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், தரிசு நிலம், வனப்பகுதி, கிராம நத்தம், நீர்நிலை ஆகிய நிலங்கள், நில நிர்வாக ஆணையரின் அனுமதி இல்லாமல் பட்டா நிலமாக மாற்றி தற்போதைய திமுக எம்பி ரமேஷ் மற்றும் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் ஆகியோரின் உறவினர்களுக்கு சட்ட விரோதமாக வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்யவும் ஆக்கிரமிப்பை அகற்றவும் தாசில்தார் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மக்கள் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறும் ஆர்.டி.ஓ பொது மக்களுக்குப் பணி செய்யாமல் ஒரு கட்சியின் ஊழியராகச் செயல்பட முடியாது. ஒருவேளை அப்படி அவர் செயல்பட்டால் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். குரலற்றவர்களின் குரலாக இருக்கும் ஏழை, எளிய மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் சட்ட விரோத செயல்களை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என எச்சரிக்கை விடுத்தார்.