தேசியத் தலைமையிடம் இருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும்வரை கூட்டணி தொடர்பாக நாங்கள் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. கூட்டணி விஷயங்களை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்று பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் கூறியிருக்கிறார்.
கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தேசிய ஐனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எங்களது தேசியத் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். எங்கள் கூட்டணியில் உள்ள அனைவரும் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று நினைக்கின்றனர். இதில், யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.
கூட்டணிக்குள் அதிகமான கட்சிகளைக் கொண்டு வருவது, புதிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற பணிகளை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும். அவர்களது வழிகாட்டுதலின் பேரிலேயே மாநிலங்களில் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் நடக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் தனி செயல்பாடு, தனி சித்தாந்தம் இருக்கும். அதேபோல, அவர்கள் போற்றும் தலைவர்களும் இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவர் பரஸ்பர நட்புடன் இருப்பதுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி.
தற்போதைய நிலையில், கூட்டணி தொடர்பாக தேசியத் தலைமை எங்களுக்கு சில வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறது. மாநிலத் தலைவரும் தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்று சொல்லி இருக்கிறார். ஆகவே, எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தலைமைதான் வலியுறுத்தும், முடிவு செய்யும். மேலும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தேசியத் தலைமையிடம் நேரடியாகவே சொல்லி வருகிறார்கள்.
எனவே, தேசியத் தலைமையிடம் இருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும் வரை, நாங்கள் கூட்டணி தொடர்பாக எந்தத் தகவலும் சொல்ல விரும்பவில்லை. கூட்டணி விஷயங்களை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தேசியத் தலைமைதான் வழிநடத்தும்” என்றார்.