அ.தி.மு.க. கூட்டணி முறிவால் அண்ணாமலைக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை என்று பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கருந.நாகராஜன் கூறியிருக்கிறார்.
சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்த பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில், கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வந்து சி.பா.ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தினோம். தமிழகத்துக்கு ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை, ஒரு பத்திரிக்கையின் வாயிலாக செய்துவரும் ஆதித்தனாரின் புகழ் என்றென்றும் ஓங்கி உயர வேண்டும்.
அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்ட பிறகு அண்ணாமலைக்கு கட்சியில் நெருக்கடி இருக்கிறதா என்று கேட்கிறீர்கள்? சிறப்பான தலைவர் சிறப்பான பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். கூட்டணி முறிவால் அண்ணாமலைக்கு எந்த நெருக்கடியும் இல்லை. தேசியத் தலைமை முடிவெடுத்த பிறகு முடிவு சொல்லப்படும். பொதுவாக, கட்சித் தலைவர்களுக்கு அவர்களது கட்சி சார்ந்த முடிவுகளை எடுக்க முழு உரிமை உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.