இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், இப்பிரச்சனைகளுக்குத் தீா்வு காண ஒருங்கிணைந்த முயற்சி அவசியம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி இருக்கிறார்.
இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகளின் இராணுவத் தலைமைத் தளபதிகள் பங்கேற்கும் 13-வது மாநாடு (ஐ.பி.ஏ.சி.சி.) டெல்லியில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவ அதிகாரிகள் பங்கேற்றிருக்கிறார்கள். இம்மாநாட்டை முன்னிட்டு இராணுவ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இம்மாநாட்டை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசுகையில், “எல்லைப் பிரச்சனை, கடல்கொள்ளை என சிக்கலான பாதுகாப்புச் சவால்களை இந்தோ-பசிபிக் பிராந்தியம் எதிா்கொண்டு வருகிறது. இதற்கு, வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரே குடும்பம்) என்கிற இந்திய அறநெறியின்படி, அமைதியையும், செழுமையையும் ஏற்படுத்த முடியும்.
ஒரே மாதிரியான சவால்கள் பல நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். பிற நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கையால் உருவாகும் சா்வதேச பிரச்சனைகளுக்கு, எந்தவொரு நாடும் தனிப்பட்ட முறையில் தீா்வுகாண முடியாது என்பதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, இந்தோ-பசிபிக் பிரச்சனைக்கு தீர்வுகாண ஒருங்கிணைந்த முயற்சி அவசியமாகும்” என்றாா்.
இந்திய இராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே பேசுகையில், “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் இறையாண்மை, எல்லை ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவிவரும் பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீா்வு காண்பது, போா்ப்படைகள் பயன்பாட்டைத் தவிா்ப்பது, சா்வதேச சட்டங்களைப் பின்பற்றுவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இந்தியாவின் இலக்காக உள்ளது” என்றார்.