காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காவிட்டால், நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் நீண்டகாலமாகவே மோதல் இருந்து வருகிறது. காவிரி ஆணையமும், உச்ச நீதிமன்றமும் தமிழகத்திற்கு சாதகமாகத் தீர்ப்புக் கூறினாலும், அதை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் இரு மாநில விவசாயிகள் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. மேலும், காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்கிற இடத்தில் அணைகட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருவது கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், இந்தாண்டு தமிழகத்துக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கும்படி காவிரி ஆணையமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டிருககின்றன. ஆனாலும், தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக மாநில அரசியல்வாதிகள் அடம் பிடித்து வருகிறார்கள். இதனிடையே, கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட்டிருக்கிறது. இதை கண்டித்து பெங்களூருவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
மேலும், நாளையும் கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட சங்கங்கள் ஆதரவு அளித்திருக்கின்றன. இந்த சூழலில், கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நேற்று பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள முதல்வர் சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட முயற்சி நடந்தது. இவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், இதுகுறித்து வாட்டாள் நாகராஜ் கூறுகையில், “எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது. இதை கண்டித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 29-ம் தேதி (நாளை) கர்நாடகாவில் மீண்டும் முழு அடைப்புப் போராட்டம் நடத்துகிறோம்.
இது ஒருபுறம் இருக்க, நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி பெங்களூருவுக்கு வந்து செல்கிறார். இங்கு இருந்தபோது ரஜினி காவிரி நீர் குடித்திருக்கிறார். ஆகவே, அவர் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். மேலும், கர்நாடகாவின் நிலையை எடுத்துக் கூற வேண்டும். இல்லாவிட்டால் அவரது படத்தை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.