ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேற்று இரவு விடிய விடிய ஆலோசனை நடத்தினர்.
இந்தாண்டு இறுதியில் 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், ராஜஸ்தான் மாநிலமும் ஒன்று. தற்போது ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனினும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சச்சின் பைலட் முதல்வர் பதவி கேட்டு கட்சித் தலைமையை வலியுறுத்தி வருகிறார்.
இதனிடையே, ராஜஸ்தானில் எதிர்கட்சியாக இருக்கும் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதையடுத்து, பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2 முறை ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசாரம் செய்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்புகூட, ராஜஸ்தான் சென்றிருந்த பிரதமர் மோடி, ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான், ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான வியூகம் வகுப்பது குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேற்று ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்றனர். ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலில் தங்கிய இருவரும், மாலையில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் நள்ளிரவையும் தாண்டி அதிகாலை வரை நீடித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலில் இழுபறியாக இருப்பதாகக் கருதப்படும் இடங்களில் மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை களமிறக்க கட்சித் தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், 3 மத்திய அமைச்சர்கள் மற்றும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்திலும் மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை களமிறக்க பா.ஜ.க. தலைமை திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில், மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கிரோடி லால் மீனா, தியா குமார், சுக்வீர் சிங் ஜான்பூரியா ஆகியோரை களமிறக்கப்படலாம் என்று ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றிபெற்றால் மேற்கண்ட நபர்களில் யாரேனும் ஒருவர் மாநில முதல்வராகலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னாள் முதல்வரும், ராஜ பரம்பரையைச் சேர்ந்தவருமான வசுந்தரா ராஜே சிந்தியா, கட்சியில் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தபோதிலும், முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.