சென்னை தி.நகரில் உள்ள நாயர் சாலையின் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால், அந்த வழியாகச் சென்ற பொது மக்கள் அச்சம் காரணமாக அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர்.
சென்னையில் வியாபார கடைகள் அதிகம் உள்ள பகுதி தி.நகர். இதனால், பொது மக்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. இதனால், தி.நகர் பகுதியில் காலை முதல் இரவு வரை எப்போதும் கும்பல் நிறைந்திருக்கும். போக்குவரத்து நெரிசலும் அதிகம் இருக்கும்.
இந்த நிலையில், இன்று காலை தி.நகரில் உள்ள நாயர் சாலையின் நடுவே திடீர் பள்ளம் ஏற்பட்டது. சாலையின் நடுவே 6 அடி அகலம், 10 அடி ஆழத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அச்சமடைந்தனர்.
இது குறித்து தகவல் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைத்தனர். மேலும், பாதுகாப்பு கருதி போக்குவரத்து மாற்றம் செய்தனர். இதனால், அனைத்து வாகனங்களும் வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.
சென்னையில் தினசரி மழை பெய்து வருவதாலும், சாலைகளில் அதிக அளவு மேடு, பள்ளங்களாலும் வாகன ஓட்டிகள் திணறி வரும் நிலையில், இந்த திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.