இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத், குஜராத் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சோம்நாத் மகாதேவ் கோவிலில் இன்று பிரார்த்தனை செய்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதையடுத்து, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் பல்வேறு கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில், முதலில் கேரளாவில் உள்ள பௌர்ணமி காவு பத்ரகாளி கோவிலுக்குச் சென்றார். தொடர்ந்து, ஆந்திர மாநிலம் சுல்லூர்பேட்டா நகரில் உள்ள செங்களாம்மா கோவிலுக்குச் சென்றார்.
கோவில் பயணம் குறித்து சோம்நாத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “அறிவியலும் ஆன்மிகமும் இரண்டு வெவ்வேறு பகுதிகள். இரண்டையும் கலக்க வேண்டியதில்லை. நான் சந்திரனையும் ஆராய்கிறேன், ஆன்மாவையும் ஆராய்கிறேன். விஞ்ஞானம் மற்றும் ஆன்மிகத்தை ஆராய்வதற்கான எனது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி இது. இந்த பிரபஞ்சத்தில் நமது இருப்பு மற்றும் நமது பயணத்தின் அர்த்தத்தைத் தேடுவதற்காக பல கோவில்களுக்குச் செல்கிறேன்.
நான் பல கோவில்களுக்கு வருகிறேன். வேதங்களைப் படித்து, இந்த பிரபஞ்சத்தில் கலையின் அர்த்தத்தையும், நமது பயணத்தையும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். இது அகத்தையும் புறத்தையும் ஆராய்வதற்காக நாம் உருவாக்கிய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. நான் அறிவியலையும் செய்கிறேன். மன திருப்திக்காக கோவில்களுக்கும் வருகிறேன்” என்று கூறினார்.
இதற்கிடையே, அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA) 50-வது தேசிய மேலாண்மை மாநாட்டில் நேற்று உரையாற்றினார். அப்போது, “நாம் நமது அமிர்தகாலை அடையும்போது, விண்வெளியில் நமது பொருளாதாரத்தின் பங்கு கணிசமானதாக இருக்கும். அது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைத் துறைகளில் வெளிவரும். ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை உருவாக்குவதன் மூலம் அல்ல, இந்தியாவில் பயன்பாடுகள், சேவைகள் மற்றும் உற்பத்தியை உருவாக்குவதன் மூலம்” என்றார்.
இந்த நிலையில், குஜராத் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று வழிபாடு நடத்தி, சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். இதுகுறித்து சோம்நாத் கூறுகையில், “சந்திரயான்-3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்குவது எங்கள் முயற்சி என்றால், அது வெற்றிகரமாகத் தரையிறங்கியது எங்களது நல்ல அதிர்ஷ்டம். சோமநாதரின் ஆசீர்வாதத்தால் நாங்கள் பணியை நிறைவேற்ற முடிந்தது. இன்னும் மற்ற திட்டங்களிலும் நாங்கள் பணியாற்ற வேண்டும். அதற்கு, எங்களுக்குத் தேவை வலிமையும் ஆசீர்வாதமும்” என்று கூறினார்.