பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் செனட்டர் அப்னான் உல்லா கான் ஆகியோர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கட்டுப்புரண்டு சண்டைப் போட்ட விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் (பி.டி.ஐ.) நிறுவனத் தலைவர் இம்ரான் கான். பிரபல கிரிக்கெட் வீரரான இவர், 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இவரது ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இவரது கூட்டணியில் இருந்து முக்கியக் கட்சி ஒன்று வெளியேறி, எதிர்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இதனால், இம்ரான் கான் அரசு கவிழ்ந்து எதிர்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.
இதன் பிறகு, இம்ரான் கானுக்கு எதிராக ஊழல், முறைகேடு, கொலை மிரட்டல் உட்பட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், தோஷகானா எனப்படும், அரசாங்கத்துக்குச் சொந்தமான விலை உயர்ந்த பொருட்களை விற்று பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் உடனடியாகக் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், தற்போது சிறையில் தண்டனையை கழித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அட்டாக் சிறையிலிருந்து அடியாலா சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, அரசியல் தொடர்பான விவாத நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில், இம்ரான் கான் வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி சார்பில் அதன் செனட்டர் அப்னான் உல்லா கான் மற்றும் பாகிஸ்தான் மக்கள் உட்பட சில முக்கியக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின்போது, இம்ரான் கான் கட்சியின் வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட்டுக்கும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் செனட்டர் அப்னான் உல்லா கானுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இம்ரான் கான் வக்கீல் மார்வாட், அப்னானை தாக்க, பதிலுக்கு அப்னானும் தாக்க, நிகழ்ச்சி நடந்த இடம் போர்க்களமானது. இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரைந்து வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அப்னான் தனது எக்ஸ் பக்கத்தில், “மார்வாட் என்னைத் தாக்கினார். பதிலுக்கு நானும் தாக்கினேன். எனக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. அதேசமயம், நான் நவாஸ் ஷெரீப்பின் சிப்பாய். நான் மார்வாட்டைத் தாக்கியது இம்ரான் கான் உட்பட பி.டி.ஐ. கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஒரு பாடம். இனி அவர்களால் வெளியுலகில் தலைகாட்ட முடியாது. முகமூடி அணிந்துகொண்டுதான் வெளியில் நடமாடவேண்டி இருக்கும்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, மார்வாட் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதவில், “நடந்தது ஒரு விரும்பத்தகாத சம்பவம். ஆனால், எனது எதிரி சூப்பர்மேன் போல நிகழ்ச்சித் தொகுப்பாளர் வதந்திகளைப் பரப்புகிறார். நான் அடித்த அடியில், அப்னான் உல்லா ஸ்டூடியோவை விட்டு ஓடி, அருகிலுள்ள அறையில் தஞ்சமடைந்தது பற்றி அவர் குறிப்பிடவில்லை. இன்று அவரது நிகழ்ச்சியைப் பார்த்த பிறகுதான் இதை நான் தெரிந்து கொண்டேன். செனட்டர் மீது அவதூறு மற்றும் கிரிமினல் வழக்குத் தொடரவிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதுபோன்று அடித்துக் கொள்வது இது முதல்முறையல்ல. கடந்த 2021-ம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் காதர் மண்டோகல், அப்போதைய இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சியின் மூத்த தலைவரும், தற்போது இஸ்திகாம் இ பாகிஸ்தான் கட்சியின் நிர்வாகியுமான ஃப்ரிதௌவ்ஸ் ஆசிக் அவான் ஆகியோர் இதுபோன்றதொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோதிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.