மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அக்டோபர் 1-ம் தேதி போபாலுக்குச் செல்வதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தாண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெறவுற்றது. இந்த 5 மாநிலங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அதேபோல, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.
எனினும், உட்கட்சிப் பூசலால் அக்கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா ஏராளமான சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெளியேறி பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்ததால், பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. ஆகவே, இம்மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் பகீரத முயற்சியில் இறங்கி இருக்கிறது.
அதேசமயம், பா.ஜ.க.வும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது. எனவே, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு பா.ஜ.க. தலைவர்கள் அடிக்கடி விஜயம் செய்து வருகின்றனர். சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காகவும், கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காகவும், வேட்பாளர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்காகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அக்டோபர் 1-ம் தேதி போபாலுக்கு வருகை தருகிறார்.
காலை 11:30 மணிக்கு போபாலுக்கு வரும் அமித்ஷா, கட்சி தலைமையகத்தில் சுமார் 3 மணி நேரம் தங்கி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாதிரி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. தலைமை இதுவரை 3 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை 79 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ள 151 இடங்களுக்கான பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 3-வது பட்டியலை பாஜக செவ்வாய்க்கிழமை வெளியிட்டது . இம்மாநிலத்தில் 3 மத்திய அமைச்சர்கள் மற்றும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் களம் காணுவது குறிப்பிடத்தக்கது.