அமெரிக்கா சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் உயர்தர உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் விவாதித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 22-ம் தேதி அந்நாட்டுக்குச் சென்றார். தொடர்ந்து அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
குறிப்பாக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியவர், இந்தியா ஹவுஸில் வணிகம், நிர்வாகம் மற்றும் சிந்தனைக் குழுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் “எங்கள் வழக்கமான உரையாடல்கள் இந்தியா-அமெரிக்க உறவை வலுவாக வைத்திருக்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாயை சந்தித்த ஜெய்சங்கர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்தார். அதேபோல, அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனையும் சந்தித்து, இந்தாண்டு இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றத்தை அங்கீகரித்தோடு, அதை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து விவாதித்தனர்.
இது தவிர, உலகளாவிய மாற்றத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கு பற்றி சந்தனையாளர்கள் குழுவுடனான உரையாடலில் பங்கேற்றார். கடந்த 26-ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார். நாளை, வாழும் கலை அமைப்பினால் நடத்தப்படும் 4-வது உலக கலாச்சார விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் அமைச்சர் ஜெய்சங்கர், நாடு திரும்புகிறார்.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் உயர்தர உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விவாதித்தார். மேலும், ஜி20 இந்தியாவின் தலைமைப் பதவியின் முக்கிய முடிவுகள் குறித்தும் விவாதித்தனர். அதேபோல, வரவிருக்கும் 2+2 உரையாடலுக்கு முன்னதாக, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பின் தொடர் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.