அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதால், அதன் மீது சீனாவுக்கு உரிமை இல்லை என்று அம்மாநில முதல்வர் பெமா காண்டு தெரிவித்திருக்கிறார்.
சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வுஷூ வீரர்கள் 3 பேருக்கு விசா வழங்க சீனா மறுத்து விட்டது. இந்த சூழலில், “எல்லை தொடர்பான பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் சீனா ஒரு தேவையற்ற அரசியல் கோணத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது” என்று அருணாச்சலப் பிரதேச மாநில முதல்வர் பெமா காண்டு கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், 36-வது மூத்த தேசிய கயிறு இழுத்தல் சாம்பியன்ஷிப் 2023 போட்டியின்போது, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பெமா காண்டு, “அருணாச்சலப் பிரதேசத்தின் மீது சீனாவுக்கு உரிமை இல்லை. வரலாற்றில் அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. அது எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகிறது. எல்லை தொடர்பான பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் சீனா ஒரு தேவையற்ற அரசியல் கோணத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது.
இப்படித்தான் சமீபத்தில் புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டது. ஆனால், சீனாவின் வரைப்படத்துக்கும் நம் நாட்டின் இடத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தை கையாண்ட விதம் சரியானதுதான். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியும் கலந்துகொள்ள முடியாததால், அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வெகுமதியாக தலா 20 லட்சம் ரூபாய் வழங்கவிருக்கிறோம்.
மேலும், 2026-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராவதற்கு 3 வீரர்களுக்கும் சிறந்த பயிற்சியை மாநில அரசு உறுதி செய்யும். அருணாச்சல பிரதேசம் பல்லுயிர் வளம் மிக்க மாநிலமாக உள்ளது. 80 சதவீத பரப்பளவு காடுகளால் சூழப்பட்டுள்ளது. தூய்மையான காற்றுடன் கூடிய மிக அழகான மாநிலம். சுற்றுலாப் பயணிகள் மாநிலத்திற்கு மிகவும் வரவேற்கப்படுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.