அரண்மனையில் சுகமாக உறங்க இனி அனுமதிக்க மாட்டோம் என்று எழுதி வாய்த்த நக்சலைட்டுகள்.
கேரள மாநிலம் வயநாட்டில், அரசு அலுவலம் மீது நக்சல் தாக்குதல் நடத்தியதால், தமிழக எல்லையில் அதிரடி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், பாட்டவயல் அருகே, கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் உள்ளது. இங்குள்ள கம்பமலை எஸ்டேட் பகுதியில், மலையாளிகள் மட்டுமின்றி தமிழர்களும் அதிக அளவில் குடியிருந்து இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு ஆறு நச்சல்கள் சென்றனர். அங்குள்ள ‘கேரளா பைனான்சியல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்’ அரசு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர்.
கதவை உடைத்து உள்ளே சென்ற நக்சல்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். அலுவலகத்தின் வெளிப்பகுதி சுவரில் போஸ்டர்களை ஒட்டிச் சென்றனர்.
அதில், புற்று நோயாளிகளை தொழிலாளர்களாக வைத்துவிட்டு, நிர்வாகத்தை அரண்மனையில் சுகமாக உறங்க இனி அனுமதிக்க மாட்டோம், கம்பம் மலை தோட்டம் ஆதிவாசிகளுக்கும், தொழிலாளருக்கும் சொந்தம் என்பன உள்ளிட்ட தகவல்களை, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் எழுதி உள்ளனர்.
மேலும், வந்தவர்கள், ‘மாவோயிஸ்ட் கபினி கொரில்லா குழு’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த பகுதி யில், கேரள மாநில அதிரடிப்படையினர் மற்றும் போலீசார், வனத்துறையினர் ஆய்வு செய்வதுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதை தொடர்ந்து, தமிழக எல்லை வனப்பகுதிகளிலும், வனத்தை ஒட்டிய தோட்டங்களிலும் தமிழக அதிரடிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.