தொடர் விடுமுறை எதிரொலியாகக் கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் பல கிலோ மீட்டர் மெதுவாக ஊர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
பெங்களூருவில் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக ஐ.டி எனப்படும் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
மிலாது நபி, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் காந்தி ஜெயந்தி எனத் தொடர் விடுமுறையை முன்னிட்டு பெங்களூரூவில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் இன்று புறப்பட்டனர்.
இதனால், முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஐடி நிறுவனங்கள் அதிகம் நிறைந்துள்ள பெங்களூரு வெளிவட்டச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால், வாகனங்களால் விரைந்து செல்ல முடியாமல், பல கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து செல்கிறது.
பெங்களூரு நகரம் போக்குவரத்து நெரிசலால், மிக குறைந்த தொலைவைக்கூடக் கடக்கப் பல மணி நேரம் ஆவதாக, பெங்களூரு டிராபிக் என்ற ஹாஷ் டேக்கில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தங்கள் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, போக்குவரத்து நெரிசலுக்கு இடையில் பெண் ஒருவர் காரில் இருந்தவாறே, ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்து வரவழைத்துச் சாப்பிட்டார். இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.