சென்னை அரும்பாக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி பள்ளி மாணவி ஒருவர் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அந்த குழந்தையை வழி மறித்த மாடு ஒன்று வெறி கொண்டு அந்த மாணவியைத் தனது வலிமையான கொம்புகளால் தூக்கிப் போட்டுப் புரட்டி எடுத்து மித்தது. அய்யோ… அம்மா… என்ற அந்த இளம் தளிரின் அழுகுரல் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து வெறி கொண்ட மாட்டியிடம் இருந்து குழந்தையை லாவகமாகக் காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சி, சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஏதோ அரும்பாக்கத்தில் மட்டும் நடந்த ஒரு நிகழ்வு அல்ல. இதுபோல், சென்னையில் பல இடங்களில் மிக சைலெண்டாக நடைபெற்றுக் கொண்டுத்தான் இருக்கிறது.
குறிப்பாக, திருவல்லிக்கேணி, கோயம்பேடு, தி.நகர், மைலாப்பூர், பாரிமுனை, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் எனத் திரும்பிய திசை எல்லாம் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிகிறது.
குறிப்பாக, காய்கறி விற்கும் சந்தைகளில் மாடுகள் கூட்டம்கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. பெண்களும், குழந்தைகளும் சாலையில் செல்பவர்களும் மாடுகளிடம் சிக்கி கதறுகின்றனர்.
இரவு நேரங்களில் சாலைகளில் ஆங்காங்கே படுத்துக் கொள்ளும் மாடுகள், அங்கேயே சிறுநீர் கழித்தும், சாணத்தைப் போட்டும் சாலைகளில் மக்கள் நடமாட முடியாமல் செய்துவிடுகின்றன.
இவை நகர மக்களை முகம் சுழிக்க வைக்கிறது. அது மட்டுமல்ல கட்டுக்கடங்காமல் சுற்றித் திரியும் மாடுகளால் இரண்டு சக்கர வாகனங்களில் வரும் ஆண், பெண் என பேதமின்றி அனைவருமே விபத்துகளில் சிக்குகின்றனர். இதனால், நாளுக்கு நாள் விபத்துக்களில் சிக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால், தெருவில் சுற்றித் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்தது என்று பொது மக்கள் ஒரு பக்கம் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர்.
15 மண்டலங்கள் 200 வார்டுகள் என பெரிய மாநகராட்சியான சென்னையில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த தனி சட்டமே உள்ளது. ஆனால், அது ஏட்டளவில் மட்டுமே உள்ளது.
அந்த சட்டத்தின்படி, சாலைகளில் சுற்றித்திரியும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கடந்த காலத்தில், ரூ.1,500 மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது அது, ரூ.3,000 ஆக உள்ளது. இதை ரூ. 20,000 அதிகரித்தாலே சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. ஆனால், இதை காதில் வாங்க மாநகராட்சி தயாரில்லை.
மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் இது தொடர்பாக செப்டம்பர் 29-ம் தேதி, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் ரூ.5,000 அபராதமும், 2 -வது முறையாக பிடிக்கப்பட்டால் ரூ. 10,000 -மும் அபராதமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தாலே அபராத தொகை உயர்த்தப்பட்டதாவும் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளது.
சாலைகளில் சுற்றித்திரிந்த சுமார் 2,800 மாடுகள் இதுவரை பிடிக்கப்பட்டுள்ளது ரூ.5 லட்சத்திற்குமேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தில் மாடுகள் வளர்க்க வேண்டும் என்றால் அதற்குக் குறிப்பிட்ட பரப்பளவில் நிலம் இருக்க வேண்டும், அவ்வாறு இருந்தால் மட்டுமே மாடுகள் வளர்க்க வேண்டும், சாலையில் மாடுகளை விடக்கூடாது எனச் சென்னை மாநகராட்சி பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேலும், மாநகராட்சி பொதுச் சுகாதாரத்துறை மூலம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை, கால்நடை பிடிக்கும் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களில் அடைத்துவைக்கின்றனர். அங்கு, மாட்டு உரிமையாளர்கள் சிறிய அளவில் அபராதத் தொகை கட்டிவிட்டால், பிடிக்கப்பட்ட மாடுகளைத் தொழுவத்திலிருந்து விடுவித்து விடுகின்றனர்.
மாட்டின் உரிமையாளர் சமர்ப்பிக்கும் பிரமாண பத்திரத்தில், மாடுகளை விடுவிக்கச் சுகாதார ஆய்வாளர், மண்டல நல அலுவலர் மற்றும் மாடு வளர்ப்போரின் வீடு உரிமையாளர் அல்லது பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையட்பம் பெற்றுச் சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்துக் கொள்ள வேண்டும். ஒரு மாடு மூன்றாவது முறையாகப் பிடிபட்டால் ப்ளூ கிராஸ் சொசைட்டி வசம் ஒப்படைக்கப்படும் என இப்படி சட்டம் இருந்தாலும், அதனால், பொதுமக்களுக்கு பயனில்லை.
மேலும், உயர் அதிகாரிகள் கண்களில் மண்ணை தூவிவிட்டு, மாட்டின் உரிமையாளர்களிடம் மாமூல் வசூல் செய்து, உண்டு கொழுத்துத் திரியும் சில மாநகராட்சி ஊழியர்களால், இந்த திட்டமே ஊத்திக் கொண்டுள்ளது.
இதனிடையே, பெருநகர மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன், மாநகரம் முழுவதும் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள், குடிக்க நல்ல தண்ணீர் இல்லாமல், சாக்கடை நீரை அருந்துவதைக் கண்டு கண்ணீர் வடித்தார். உடனே ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், அசுத்த நீரை அருந்தும் இது போன்ற மாடுகள் கொடுக்கும் பாலை மனிதர்கள் அருந்தினால், அவர்களுக்கும் நோய்த் தொற்று வரும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை மணி அடித்தார்.
இப்படி, மாடுகளையும் பிடிக்க வேண்டும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்ற நேர்மையான அதிகாரிகள் ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்தால், ஊழல் பெருச்சாளிகள் அதை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, வசூல் வேட்டையில் தூள் கிளப்பி வருகின்றனர்.
மாநகராட்சியில் தனியாக லஞ்ச ஒழிப்புத்துறை ஒன்று உள்ளது என்று இதுவரை சென்னை மாநமகர மக்களுக்கு யாருக்கும் தெரியாது என்பது தான் வேதனையிலும் வேதனை. விஜிலென்ஸ் அதிகாரிகள் குற்றவாளிகளை பிடிக்காமல் தூங்கி வழிவதால், மாடுகள், மாநகராட்சி ஊழியர்கள் எனச் சட்ட விரோத கூட்டணி செழிப்புடன் வலம் வருகிறது.
அப்பாவி மக்கள்தான் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்… இதற்கு தீர்வுத்தான் எப்போது? திமுக ஆட்சி முடிவுக்கு வரும்போது….!