5 ஆண்டுக்கால தொடா் வைப்புக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
டிசம்பா் மாதம் வரையிலான காலாண்டுக்கு இந்த வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ஓராண்டு நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 6.9 சதவீதமாக இருக்கும்.
இந்த வட்டி விகிதம் டிசம்பர் மாதம் வரை இருக்கும். 2 மற்றும் 3 ஆண்டு நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி 7 சதவீதமாகவும், 5 ஆண்டு நிரந்தர வைப்புக்கான வட்டி 7.5 சதவீதமாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி 8.2 சதவீதமாக உள்ளது.
இதில், மாதம்தோறும் வட்டி பெறும் வகையிலான வைப்புத்தொகைகளுக்கு 7.4 சதவீத வட்டி தொடர்ந்து வழங்கப்படும். தேசிய சேமிப்புத் பத்திரத்துக்கான வட்டி 7.7 சதவீதமாகவும், பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 7.1 சதவீதமாகவும் இருக்கும்.
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாகும். 115 மாதங்களில் முதிா்ச்சி பெறும் கிஸான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
5 ஆண்டுக்கால தொடா்வைப்புக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தபால் நிலையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் சேமிப்புத் திட்டங்கள் கிராமப்புறங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுக்கான வட்டி 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.