சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்குச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மாலை 6 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு அருகே உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது.
இதில், மழைக்காக பெட்ரோல் பங்க் அருகே ஒதுங்கியிருந்தவர்களில் பலர் காயமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இது குறித்து அதிகாரிகள் தரப்பிடம் கேட்டபோது, பெட்ரோல் பங்கின் கூரை சரிந்து 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 4 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், 3 பேர் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இளைஞர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 16 ஆண்டுகளுக்கு மேல் அமைக்கப்பட்ட மேற்கூரை காரணமாகவே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றார்.
இந்த நிலையில், விபத்து நடந்த பெட்ரோல் பங்கிற்குச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், மேற்கூரை சரிந்த விபத்தில் கந்தசாமி என்பவர் பலியான நிலையில் பங்க் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.