இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூன் மாதம் கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சீக்கிய குருத்வாரா முன்பு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையில் கனடா நாட்டிலுள்ள இந்தியத் தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, காலிஸ்தான் தீவிரவாதிகள் கூறியதோடு, அத்தூதர்களின் புகைப்படத்தையும் வெளியிட்டனர்.
இந்த சூழலில், இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டுக்கு வருகை தந்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், ஹர்தீப் சிங் கொலை, இந்திய தூதர்கள் புகைப்படம் வெளியீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விவாதித்தார். மேலும், கனடாவிலுள்ள காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
ஆனால், நாடு திரும்பிய கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரோடோவோ, நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஹர்தீப் சிங் நிஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும், அந்நாட்டிலுள்ள இந்திய தூதரையும் வெளியேற உத்தரவிட்டார். இதனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதருக்கு ஸ்காட்லாந்து குருத்வாராவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இங்கிலாந்துக்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தின் ஆல்பர்ட் டிரைவிலுள்ள கிளாஸ்கோ குருத்வாரா கமிட்டியுடன் ஒரு சந்திப்புக்குத் திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் குருத்வாராவுக்குச் சென்றிருக்கிரார்.
இதையறிந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் விக்ரம் துரைசாமியை குருத்வாராவுக்குள் நுழையவிடாமல் தடுத்திருக்கிறார்கள். மேலும், இங்கிலாந்திலுள்ள எந்த குருத்வாராவுக்குள்ளும் இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.