என் மண் என் தேசம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், அமிர்த கலச யாத்திரையை தொடங்கி இருக்கிறார்கள்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, சுதந்திரத்துக்கும், பாதுகாப்புக்கும் பங்களித்த வீரமிக்க வீரர்கள் மற்றும் குடிமக்களின் தியாகங்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தும் வகையில், அமிர்த கலச யாத்திரை நடத்தப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் செப்டம்பர் 1-ம் தேதி அமிர்த கலச யாத்திரையைத் தொடங்கி வைத்தார்.
இந்த இயக்கத்தின் மூலம், அமிர்த கலச யாத்திரை என்கிற பெயரில், நாடு முழுவதிலும் இருந்து சிறிய அளவிலான 7,500 பானைகளில் மண் மற்றும் மரக்கன்றுகள், செடிகள் சேகரிக்கப்படும். இவை டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு, போர் நினைவிடத்தில் கொட்டப்பட்டு, மிகப்பெரிய அளவிலான பூங்கா அமைக்கப்படும்.
மேலும், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இந்த முன்னெடுப்பில் நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பங்கெடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜ.க.வினரால் அமிர்த கலச யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், முதல் முறையாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் அமிர்த கலச யாத்திரையில் பங்கேற்றிருக்கிறார்கள்.
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், என் மண் என் தேசம் என்கிற அமிர்த கலச யாத்திரையை தொடங்கி இருக்கிறார்கள். அதன்படி, மாநிலத்தின் கிழக்கு காசி மலைகள் மற்றும் மேற்கு ஜெயந்தியா மலை மாவட்டங்களில் உள்ள எல்லையோர கிராமங்களான லிங்காட், பைர்த்வா, உம்சியம், டாவ்கி, காங்வாங் ஆகிய கிராமங்களில் இருந்து மண் மற்றும் செடிகள் சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிராம மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியதினர்.