மனித உரிமைகள் பற்றிய கருத்து தவறாகப் பயன்படுத்தப்படுவது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. கனடா கொலைகாரர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்று வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் தெரிவித்திருக்கிறார்.
கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சீக்கிய குருத்வாரா முன்பு, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், கனடாவுக்குமான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில், மனித உரிமைகள் என்கிற பெயரில் கனடா குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவதாக வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் கூறியிருக்கிறார்.
அதாவது, பங்களாதேஷின் ஸ்தாபகத் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். இவரும், இவரது குடும்ப உறுப்பினர்கள் 17 பேரும் கடந்த 1975-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டனர். இக்கொலையில் முக்கியக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர் இராணுவ அதிகாரி நூர் சௌத்ரி. இவர், தற்போது கனடாவில் வசித்து வருகிறார். ஆகவே, அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதற்காக, நூர் சௌத்ரியை நாடு கடத்தும்படி, கனடா அரசிடம் வங்கதேச அரசு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், கனடா அரசு மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி நாடு கடத்த மறுத்து வருகிறது.
இந்த நிலையில்தான், வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் கனடாவை கடுமையாகச் சாடி இருக்கிறார். இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அப்துல் மொமன், “கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக் கூடாது. கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பம் கஷ்டத்தில் இருக்கும்போது, கொலையாளிகள் கனடாவில் தஞ்சமடைந்து, அற்புதமான வாழ்க்கையை வாழமுடிகிறது. கனடாவின் இந்த நிலைப்பாடு மற்றும் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக அந்நாடு குற்றவாளிகளின் பாதுகாப்புக் கவசமாக மாறி வருகிறது.
மனித உரிமைகள் பற்றிய கருத்து பலரால் பல நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவது உண்மையில் துரதிருஷ்டவசமானது. ஏனெனில், கொலையாளிகள் மற்றும் பயங்கரவாதிகளை பாதுகாக்க மனித உரிமைகள் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவுடனும், கனடாவுடனும் நாங்கள் நல்ல உறவைக் கொண்டிருக்கிறோம். இரு நாடுகளும் எங்களுக்கு நண்பர்கள். கனடா குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவிடக் கூடாது. நாங்கள் சிலரை உடனடியாக நாடு கடத்துமாறு கனடா அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, அவர்கள் அப்பிரச்சனை குறித்து தற்போது எங்களிடம் பேசுவதில்லை” என்று கூறியிருக்கிறார்.
ஆக, கனடாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் அழுத்தம் அதிகரித்து வருகிறது.