தொடர் விடுமுறையை ஒட்டி, கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு, தமிழக மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும், குளு குளு காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்தக் குளுமையை அனுபவிக்கவும், இயற்கை அழகை பார்த்து இரசிப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர்.
மேலும், பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து நீண்ட வரிசையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்தனா்.
கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களான ரோஜாத் தோட்டம், பசுமை பள்ளத்தாக்கு, வெள்ளி நீா் அருவி, தாவரவியல் பூங்கா, பைன் மரக் காடுகள், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களைச் சுற்றுலாப் பயணிகள் கண்டு இரசித்தனர்.
தற்போது, மலைப்பகுதிகளில் லேசான சாரல் மழையும், கடும் குளிரும் நிலவுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிருக்குப் பாதுகாப்பான ஆடைகளை அணிந்தபடியும், நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தும் சுற்றுலா இடங்களைக் கண்டு இரசிக்கின்றனர்.