2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை ரிசர்வ் வங்கி அக்டோபர் 7 வரை நீட்டித்துள்ளது
வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு இன்றுடன் (2023 செப்டம்பர் 30) நிறைவடையயுள்ள நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 7 வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மே 19, 2023 தேதி ₹2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. பொதுமக்கள், வங்கிகளில் செப்டம்பர் 30, 2023 வரை ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும், மாற்றிக்கெள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, மே 19, 2023 அன்று புழக்கத்தில் உள்ள ₹2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பான ₹3.56 லட்சம் கோடியில், ₹3.42 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட்டு, தற்போது ₹0.14 லட்சம் கோடி மட்டுமே புழக்கத்தில் உள்ளது. தற்போது ₹2000 ரூபாய் நோட்டுகளில் 96% திரும்பப் பெறப்பட்டது.
திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் மறுஆய்வின் அடிப்படையில், பலரின் கோரிக்கையை ஏற்று, வங்கிகளில் ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட், மாற்றுவதற்கான காலஅவகாசம் அக்டோபர் 07, 2023 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 08 முதல் ரூ.2 ஆயிரம் நோட்டை பரிமாற்றத்திற்கு பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.