தமிழ்நாட்டைப் பிடித்து இருக்கும், அழுக்குகளை நீக்கி, ஊழல் குப்பைகளை சுத்தம் செய்து, தூய்மையான தமிழகத்தை உருவாக்குவோம் எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டில், நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி, பாரத நாட்டை தூய்மை செய்யும் தொலைநோக்குத் திட்டத்துடன், ஸ்வச் பாரத் என்று தொடங்கிய ஒரு அறச்செயல், ஸ்வச் பாரத் மிஷன் இன்று அனைத்து இல்லத்தின் அணுக்கமான பெயராக மாறியிருக்கிறது.
மனதின் குரல் நிகழ்ச்சியின் 105 வது தொகுப்பிலே, பாரதப் பிரதமர் நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதாவது, தான் வாழும் காலத்தில் தூய்மையை வலியுறுத்திய காந்தியடிகளுக்கு, மக்கள் தூய்மையான அஞ்சலி செலுத்தும் முகமாக, “ஒருநாள், ஒருமணிநேரம், ஒற்றுமையுடன்” கூடி பொது இடங்களில் சுத்தம் செய்வதன் மூலம் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அடுத்த நாள் தொடங்கும் காந்தி ஜெயந்தி மிகவும் வித்தியாசமாகவும், அற்புதமாகவும், தூய்மையானதாகவும், அமைய இந்த ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒன்றாக செய்யும் சேவை, பயனுள்ளதாக அமையும் என்று பிரதமர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த சிறப்பு பிரச்சாரத்திலேயே பங்கேற்கும் வகையில், அக்டோபர் ஒன்றாம் தேதி, காலை பத்து மணிக்கு, நாட்டு மக்கள் அனைவரும், தங்கள் பகுதியிலே இந்த தூய்மை அறப்பணியில் ஈடுபடலாம்.
அக்டோபர் ஒன்றாம்தேதி, மக்கள் கூடும் சந்தைகளிலும், மத வழிபாட்டு தலங்களிலும், இரயில் பாதைகளிலும், ரயில் நிலையங்களிலும், நீர் நிலைகளிலும், சமூகக் கூடங்களிலும், நகர்ப்புறம் மற்றும் கிராமச்சாலைகளிலும் துப்புரவு மற்றும் தூய்மைப் பணிகளை, சாமானிய மக்களும் பாரத தேசத்தின் தூய்மைத் தூதர்களாக, முன்னெடுத்துச் செய்யலாம்.
பாரதப் பிரதமரின் இந்த நல்ல முயற்சிக்கு, கோடிக்கணக்கான மக்கள் தங்கள் ஆதரவை https://swachhatahiseva.com/ இணையத்தின் வழியாக தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டைப் பிடித்து இருக்கும், அழுக்குகளை நீக்கி, ஊழல் குப்பைகளை சுத்தம் செய்து, தூய்மையான தமிழகத்தை உருவாக்கும் முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் நம் பாரதிய ஜனதா கட்சியின் செயல்வீரர்களும், பொதுமக்களும், 5 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்களிப்புடன் நடைபெறும்.
இந்தத் தூய்மை அறப்பணியிலே, தன்னார்வத்துடன் பங்கேற்று, பாரதப் பிரதமரின் கரத்தை வலுப்படுத்த உறுதி ஏற்கும் படி அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். நல்வாழ்த்துகள். நன்றி…