இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு எல்லையே இல்லை. இருவரும் ஒருவரையொருவர் விரும்பத்தக்க, உகந்த, வசதியான பங்களிகளாக இருக்கிறார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.
அமெரிக்கா சென்றிருந்த அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டன் டிசியிலுள்ள இந்தியா ஹவுஸில் நடந்த ‘நட்பின் நிறங்கள்’ நிகழ்வில் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி, வெளியுறவுத்துறை துணைச் செயலர் ரிச்சர்ட் வர்மா, அதிபர் ஜோ பைடனின் உள்நாட்டு கொள்கை ஆலோசகர் நீரா டான்டன், தேசிய மருந்துக் கட்டுப்பாட்டுக் கொள்கையின் வெள்ளை மாளிகை அலுவலக இயக்குநர் டாக்டர் ராகுல் குப்தா, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதனேதர் மற்றும் ரிக் மெக்கார்மிக், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியா-அமெரிக்கா உறவு என்பது எல்லை இல்லாதது. அது எதிர்பார்ப்புகளை மீறி இருக்கிறது. நாங்கள் புதிய களங்களைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறோம். ஒருவருக்கொருவர் எவ்வளவு அதிகமாகச் செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் செய்ய முடியும். ஒன்றாக ஆராய்ந்து ஒன்றாகச் சாதிக்க முடியும். இந்த மாறிவரும் உலகில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒருவரையொருவர் மிகவும் விரும்பத்தக்க, உகந்த, வசதியான கூட்டாளர்களாகப் பார்க்கும் நிலைக்கு நகர்ந்திருக்கின்றன. இது இயற்கையான உள்ளுணர்வாக இருக்கிறது.
இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவியானது மகாத்மா காந்தியின் செய்தியைச் சுற்றியே உள்ளது. நான் உங்களுக்கு ஒரு யோசனையை வைக்க விரும்புகிறேன். மகாத்மா காந்தி ஒரு அசாதாரண மனிதர் என்று சொல்வது இந்த நூற்றாண்டின் குறைத்து மதிப்பிடலாக இருக்கும். அவர் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். சரியானதைச் செய்வது, கண்ணியமானதைச் செய்வது, அதேசமயம் யாரையும் விட்டுவிடாதது. காந்திஜியின் செய்தி மிகவும் சிக்கலானதாக இருந்தாலும், அதன் சாராம்சம் உண்மையில் மிக மிக எளிமையானது. ஜி20 தலைமைப் பதவியை நாங்கள் எடுத்தபோது, காந்தியின் செய்தி எங்கள் சிந்தனையின் மையத்தில் இருந்தது” என்று கூறினார்.