இந்திய இராணுவமும், அருணாச்சலப் பிரதேச மாநில அரசும் இணைந்து சீன எல்லையான தவாங் கிராமத்தில் முதல் மராத்தான் போட்டியை நடத்தின.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள எல்லையோர கிராமங்களை சீன தனது நாட்டுக்குச் சொந்தமானதாகக் கூறி, சமீபத்தில் ஒரு வரைப்படத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இந்த சூழலில், இந்தியாவின் மராத்தான் வரைபடத்தில் வடகிழக்கு மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைக் கொண்டுவரும் வகையில், இந்திய இராணுவமும், அருணாச்சலப் பிரதேச மாநில அரசும், எல்லை கிராமமான தவாங்கில் மராத்தான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன.
அதன்படி, இன்று மராத்தான் நிகழ்ச்சி நடந்தது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூவும், மாநில முதல்வர் பெமா காண்டுவும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தவாங்கில் உள்ள ஹை ஆல்டிட்யூட் ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கிய இந்த மராத்தான் இந்தியாவின் முதல் உயரமான மாரத்தான் என்று கூறப்படுகிறது. இந்த மராத்தானில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 2,000 பேர் பங்கேற்றார்கள். இந்தியாவின் கடினமான பாதைகளில் ஒன்றாக இந்த மராத்தான் கருதப்படுகிறது.
இந்த மராத்தான் குறித்து பேசிய இந்திய இராணுவத்தின் கஜ்ராஜ் கார்ப்ஸின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் எர்ரி, “மாநில அரசுடன் இணைந்து நாங்கள் நடத்திய இந்த மராத்தான், வடகிழக்கு மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் மாரத்தான் வரைபடத்தில் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கத்தைக் கொண்டிருந்தது. இங்கிருந்து மக்கள் முன்பு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க வெகுதூரம் சென்று வந்தனர். எனவே, இங்கேயே நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்தோம். உயரமான மாரத்தான் மிகவும் கடினமான ஒன்றாகும். அக்டோபர் மாதத்தில் ஆக்ஸிஜன் சதவீதம் இங்கு அதிகமாக இருக்கும். எனவே, இந்த மராத்தானை ஏற்பாடு செய்ய இதுவே சிறந்த நேரம்” என்றார்.
மேலும், இந்திய-சீனா எல்லையில் உள்ள தவாங்கில் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து லெப்டினன்ட் ஜெனரல் எர்ரி கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தவாங்கைத் தாண்டி சாலைகள் இல்லாத ஒரு காலம் இருந்தது. ஆனால், இன்று நீங்கள் கடைசி எல்லை வரை சாலைகளைக் காண்பீர்கள். வளர்ச்சியால் மக்கள் பயனடைவார்கள். மொபைல் இணைப்பும் இங்கே உள்ளது. பல்வேறு நிறுவனங்களும் இங்கு வந்து தங்களுடைய உள்கட்டமைப்பை அமைத்து வருகின்றன” என்றார்.