கோவை அடுத்துள்ள புகழ் பெற்ற மருதமலை திருக்கோவிலுக்கு 5 -ம் தேதி முதல் மலைப்பாதையில் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புகழ் பெற்றது மருதமலை முருகன் திருக்கோவில். இந்த திருக்கோவில் கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மருத மலைமேல் அமைந்துள்ளதால் மருதன் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றது. இந்த மலைக்கு, மருதாசலமூர்த்தி திருக்கோவில் என்றும் மற்றொரு பெயரும் உண்டு.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்யத் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக மின்தூக்கி அறை, காத்திருப்பு அறை, கட்டணச் சீட்டு வழங்கும் இடம் ஆகியவற்றுடன் மின்தூக்கி வசதி ஏற்படுத்தும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
அத்துடன், மலைசாலையில் உள்ள தார்ச் சாலையைச் சீரமைத்தல் பணியுடன், திருக்கோவிலின் மலைமேல் புதிதாக யாகசாலை மண்டபம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.
மேலும், திருக்கோவில் தங்கரதம் உலா வரும் பாதையில் கருங்கல் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே, வரும் அக்டோபர் மாதம் 5 -ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு மலைப்பாதையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்குக் கோவில் பேருந்து மற்றும் படிப்பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.