ஜம்மு காஷ்மீரின் தாங்கிரி தாக்குதல் தொடர்பாக, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் தாங்கிரி கிராமத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கடந்த ஜனவரி மாதம் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 5 பொதுமக்கள் உயிரிழந்தனர். பலரும் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல் தொடர்பாக, ரஜோரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நிஜார் அகமது என்கிற ஹாஜி நிஜார் மற்றும் முஷ்டாக் ஹுசைன் ஆகியோரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இருவரும் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் என்பதோடு, பாகிஸ்தானை தலைமை இடமாகக் கொண்டு இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியான் சைபுல்லாவின் வழிகாட்டுதல் படி செயல்பட்டு வரும் சஜித் ஜூட், அபு கத்தால், கத்தல் சிந்தி மற்றும் முகமது காசிம் ஆகியோருடன் தொடர்பில் இருந்து வந்திருக்கிறார்கள். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் தாலுகாவிலுள்ள குர்சாய் கிராமத்தில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய ஓவர்கிரவுண்ட் தொழிலாளர்களின் (ஓ.ஜி.டபிள்யூ.க்கள்) குடியிருப்பு வளாகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
இச்சோதனையின்போது, பல டிஜிட்டல் சாதனங்கள், குற்றவியல் தரவுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.