செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூபாய் 1,62,712 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூபாய் 1,62,712 கோடியாக உள்ளது.
இதில், சிஜிஎஸ்டி 29,818 கோடி ரூபாயும், எஸ்ஜிஎஸ்டி 37,657 கோடி ரூபாயும், ஐஜிஎஸ்டி 83,623 கோடி ரூபாயும்(பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 41,145 கோடியும் சேர்த்து), செஸ் வரி 11,613 கோடி ரூபாயும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூபாய் 881 கோடி உட்பட) அடங்கும்.
ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூபாய் 33,736 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூபாய் 27,578 கோடியும் அரசு வழங்கி உள்ளது.
செப்டம்பர் மாதத்தில் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் CGST ரூபாய் 63,555 கோடியும், SGST ரூபாய் 65,235 கோடியும் ஆகும்.
2023 செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூலானது, கடந்த 2022 செப்டம்பர் மாதம் வசூல் ஆன தொகையை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.
உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய், கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்ததை விட 14 சதவீதம் அதிகமாகும்.
2023-24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூபாய் 1.60 லட்சம் கோடியைத் தாண்டுவது இது நான்காவது முறையாகும்.
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிஎஸ்டி மூலம் ரூபாய் 9,92,508 கோடி வசூல் ஆகி உள்ளது. இது கடந்த 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் வசூல் ஆன ரூபாய் 8,93,334 கோடியை விட 11 சதவீதம் அதிகம் ஆகும்.
2023-24 நிதியாண்டில் சராசரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூபாய் 1.65 லட்சம் கோடியாக உள்ளது. இது 2022-23 நிதியாண்டின் முதல் பாதியில் இருந்த சராசரி வசூலை விட 11% அதிகமாகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.