காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். மக்கள் தங்கள் எண்ணங்கள், பேச்சு மற்றும் செயல்களில் காந்தி ஜியின் போதனைகளைப் பின்பற்றி, நாட்டு நலனுக்காக தங்களை அர்ப்பணிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டிருக்கும் செய்தியில், “அனைத்து குடிமக்கள் சார்பாக தேசத் தந்தைக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். காந்தி ஜியின் உண்மை மற்றும் அகிம்சையின் இலட்சியங்கள் உலகிற்கு ஒரு புதிய வழியை வகுத்தன.
காந்தி ஜி தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சைக்காக போராடியது மட்டுமல்லாமல், தூய்மை, பெண்கள் அதிகாரம், தன்னம்பிக்கை, தீண்டாமை, சமூகப் பாகுபாடு, கல்வியறிவின்மை மற்றும் விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் போராடினார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க காந்தி ஜி நம்மை ஊக்குவித்தார். மேலும், வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த ஒரு பெரிய இயக்கத்தை வழிநடத்தி சுதந்திரம் பெற்றார்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா மற்றும் உலகின் பல அரசியல்வாதிகள் காந்தி ஜியின் கருத்துக்களால் கவரப்பட்டிருக்கிறார்கள். காந்தி ஜியின் வலுவான மற்றும் துடிப்பான சித்தாந்தம் எப்போதும் உலகிற்கு பொருத்தமானதாக இருக்கும். ஆகவே, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டின் நலனுக்காக நமது சுயத்தை அர்ப்பணிக்க, நமது சிந்தனை, பேச்சு மற்றும் செயலில் காந்தி ஜியின் போதனைகளைப் பின்பற்ற உறுதிமொழி எடுப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.