ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இடதுசாரி தீவிரவாத வழக்குகள், மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சல் வழக்கில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் வீடுகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) இன்று சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நக்சல்களின் ஆதிக்கும் அதிகரித்து வருகிறது. எனவே, இடதுசாரி தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்கள், நக்சல்கள் மற்றும் இவர்கள் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் ஆகியோர் குறித்த தகவல்களை என்.ஐ.ஏ. சேகரித்தது. இதைத் தொடர்ந்து, இரு மாநிலங்களிலும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு மாநிலங்களிலும் சந்தேக நபர்களின் இருப்பிடங்கள் மற்றும் மறைவிடங்களில் சோதனை நடந்து வருகிறது.
காலை முதல் தனி என்.ஐ.ஏ. குழுக்கள் மாநில காவல்துறையினருடன் இணைந்து இச்சோதனையில் ஈடுபட்டிருக்கின்றன. இது தொடர்பாக, என்.ஐ.ஏ. உயர் அதிகாரிகள் கூறுகையில், “ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்கள், நக்கல்கள் மற்றும் இவர்கள் தொடர்பான வழக்குகளின் ஆஜரான வழக்கறிஞர்கள் உட்பட சந்தேகத்துக்குரிய நபர்களுக்குச் சொந்தமான 60 இடங்களில் சோதனை நடந்து வருகிறது” என்று தெரிவித்தனர்.
ஆந்திராவின் குண்டூர், நெல்லூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களிலும், தெலங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் கொத்தகுடெம் பகுதியின் செர்லா மண்டலத்தில் 3 பேரிடம் இருந்து வெடிகுண்டு பொருட்கள், ட்ரோன்கள் மற்றும் லேத் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 12 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்தது.
அதேபோல, கடந்த ஆகஸ்ட் மாதம் பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தெலங்கானா மற்றும் சத்தீஸ்கரில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாகவே தற்போதும் இச்சோதனைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.