தேசிய புலனாய்வு முகமையால் ( என்.ஐ.ஏ.) தேடப்பட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஷாநவாஸ் சஃபி உஸாமா ஆலம் என்கிற அப்துல்லா, ரிஸ்வான் அப்துல் ஹாஜி அலி மற்றும் ஃபயாஸ் ஷேக் ஆகிய 3 பேரை டெல்லி காவல்துறை இன்று கைது செய்திருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாமைச் சேர்ந்தவர் ஷாநவாஸ் சஃபி உஸாமா. பொறியியல் பட்டதாரியான இவர், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, வட மாநிலங்களில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றத் திட்டமிட்டிருந்தார். இதற்கு, அவரது நண்பர்களாக முகமது இம்ரான், முகமது யூனுஸ் கான் மற்றும் முகமது யூனுஸ், முகமது யாகூப் சாகி ஆகியோர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.
இவர்கள் கடந்த ஜூலை 18-ம் தேதி தங்களது தீவிரவாத செயலை அரங்கேற்றுவதற்காக, புனேவில் ஒரு இருசக்கர வாகனத்தை திருட முயன்றனர். அப்போது, கோத்ருட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கோந்த்வாவில் உள்ள அவர்களின் வீட்டிற்கு காவல்துறையினர் சோதனைக்காக சென்றனர். அப்போது, ஷாநவாஸ் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வந்தது. இதன் பிறகு, ஷாநவாஸ் உள்ளிட்ட 4 பேரின் புகைப்படங்களை வெளியிட்ட என்.ஐ.ஏ., மேற்கண்ட நபர்கள் பற்றி தகவல் கொடுத்தால் 3 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும், தகவல் அளிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இவர்களில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், ஷாநவாஸ் மட்டும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.
இந்த நிலையில்தான், ஷாநவாஸ், ரிஸ்வான் அப்துல் ஹாஜி அலி மற்றும் ஃபயாஸ் ஷேக் ஆகிய 3 பேரையும் டெல்லி காவல்துறை கைது செய்திருக்கிறது. இவர்களில் ஷாநவாஸ் என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடமிருந்து ஐ.இ.டி. எனப்படும் அதிபயங்கரமான வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் உள்ளிட்டவற்றையும் காவல்துறயினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.