ராஜஸ்தானில் நிகழ்ந்து வரும் குற்றச் சம்பவங்கள் குறித்து தனது வேதனையை வெளிப்டுத்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் பாதுகாப்பை பா.ஜ.க. உறுதி செய்யும். கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை காங்கிரஸ் அழித்து விட்டது என்று கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், சித்தோர்கரில் ரோடு ஷோ நடத்திய பிரதமருக்கு கூடியிருந்த மக்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, “கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தான் மாநிலத்தை காங்கிரஸ் அழித்து விட்டது. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை ராஜஸ்தானில்தான் அதிகபட்சமாக இருந்து வருகிறது. குற்றப் பட்டியலில் மற்றும் குற்றச் சம்பவங்களில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது? கலவரங்களில் மற்றும் கல் வீச்சு சம்பவங்களில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது? ராஜஸ்தான் மாநிலம் முதலிடம் வகிக்கிறது என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.
பெண்கள் மற்றும் தலித் விரோதப் போக்கில் எந்த மாநிலத்திற்கு மோசமான பெயர் உள்ளது? இதற்காகவா காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தீர்கள்? ராஜஸ்தானில் பெண்களின் பாதுகாப்பை பா.ஜ.க. உறுதி செய்யும். மேலும், பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே ராஜஸ்தானில் அனைத்துத் துறையிலும் வளர்ச்சியைக் கொண்டு வர முடியும். ராஜஸ்தானின் வளர்ச்சியே மத்திய அரசின் மிகப்பெரிய முன்னுரிமை. முதல்வர் அசோக் கெலாட் தனது தோல்வியை இப்போது ஏற்றுக் கொண்டு விட்டார்.
காங்கிரஸின் பிரியாவிடைக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டதை முதல்வர் அசோக் கெலாட் நன்கு அறிவார். ராஜஸ்தானில் பாஜ.க. ஆட்சி அமைத்த பிறகு மக்கள் நலத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படாமல் செயல்படுத்தப்படும். முதல்வர் கெலாட் தனது பதவியை பாதுகாப்பதில் மும்முரமாக இருந்தார். அவரது கட்சி அவரது பதவியை பறிப்பதில் மும்முரமாக இருந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு வினாத்தாள் கசிவு அதிகம் நடக்கிறது .பாஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, வினாத்தாள் கசிவு தடுத்து நிறுத்தப்படும் என்று ராஜஸ்தான் இளைஞர்களுக்கு நான் உத்தரவாதம் அளிக்க விரும்புகிறேன். வன்முறையில் ஈடுபடுபவர்களை வெளியேற்றுவோம். கலவரத்தை தடுத்து நிறுத்துவோம். பெண்களுக்குப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை கொண்டு வருவோம். இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி அடையும்” என்றார்.
இக்கூட்டம் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி மத்தியப் பிரதேச மாநிலத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.