அமெரிக்காவில் அரசு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் சபை கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், நள்ளிரவு வரை நடந்த விவாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, முடங்கும் அபாயத்தில் இருந்த அமெரிக்கா தப்பி இருக்கிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, அரசு செலவினங்கள், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவை தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இதையடுத்து, வரும் நவம்பர் மாதம் வரையிலான செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஒப்புதல் பெறுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது.
இதில், அரசின் செலவினத் திட்டங்களுக்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் சபை எதிர்ப்புத் தெரிவித்தது. இந்த சபையில் எதிர்கட்சியான குடியரசுக் கட்சி அதிக பலத்துடன் உள்ளது. எனவே, ரஷ்யா போர் தொடுத்திருக்கும் உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பதற்கு, குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எனினும், அக்கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, அரசு செலவினத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பால் நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேற முடியாமல் இழுபறி நீடித்தது. அதேசமயம், நேற்று முன்தினம் நள்ளிரவுக்குள் மசோதா நிறைவேறாவிட்டால், அமெரிக்காவே முடங்கும் அபாயத்தில் இருந்தது.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதிக்கட்ட விவாதங்களுக்குப் பிறகு, நிதி ஒதுக்கும் மசோதா 335:91 என்ற ஆதரவுடன் நிறைவேறியது. ஆனால், உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம், இச்செலவினத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இதன் பிறகே, நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, இம்மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். எனினும், திட்டமிடப்பட்டிருந்த நிதியைவிட குறைவான நிதிக்கே தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அரசின் செலவினங்களுக்காகவிரைவில் மீண்டும் மசோதா தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.