சத்தீஸ்கர் மாநிலத்தில் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பஸ்தார் பகுதியிலுள்ள தண்டேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்கட்சியான பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டிருக்கிறது. மீதமுள்ள வேட்பாளர்கள் பட்டியில் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்கிறது.
இந்த நிலையில், இன்று சத்தீஸ்கர் மாநிலத்திற்குச் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார். மேலும், நாகர்நாரில் 23,800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரும்பு ஆலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த எஃகு ஆலை உயர்தர எஃகு உற்பத்தி செய்யும் ஒரு பசுமைத் திட்டமாகும்.
மேலும், துணை மற்றும் கீழ்நிலைத் தொழில்களில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பஸ்தாரை உலகின் எஃகு வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்வதோடு, இப்பகுதியின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். மேலும், அந்தகர் மற்றும் தரோகி இடையே புதிய இரயில் பாதையையும், ஜக்தல்பூர் மற்றும் தண்டேவாரா இடையேயான இரயில் பாதை இரட்டிப்பு திட்டத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இது தவிர, போரிடாண்ட் – சூரஜ்பூர் இரயில் பாதை இரட்டிப்புத் திட்டம் மற்றும் அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் ஜக்தல்பூர் இரயில் நிலையம் மறுசீரமைப்பு ஆகிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதோடு, தரோகி – ராய்ப்பூர் டெமு இரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த இரயில் திட்டங்கள் சத்தீஸ்கரின்
பழங்குடிப் பகுதிகளில் இணைப்பை மேம்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேம்படுத்தப்பட்ட இரயில் உள்கட்டமைப்பு மற்றும் புதிய ரயில் சேவை உள்ளூர் மக்களுக்கு பயனளிப்பதோடு, பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.
மேலும், தேசிய நெடுஞ்சாலை 43-ன் ‘குங்குரியில் இருந்து சத்தீஸ்கர் – ஜார்கண்ட் எல்லைப் பகுதி வரை’ சாலை மேம்படுத்தும் திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த புதிய சாலையானது சாலை இணைப்பை மேம்படுத்தி, இப்பகுதி மக்களுக்கு பயனளிக்கும்.